நரிக்குறவர் சுய உதவி குழுவின் வெற்றிக்கதை

வணக்கம். என்னுடைய பெயர் ஸ்னேகா. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவள். நானும் என்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம். நெமிலி ஊராட்சி, காரந்தாங்கல் என்ற கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் மொத்தம் 44 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் நாடோடிகளாக சுற்றித் திரிந்து பாசிமணியில் செய்யப்படும் மணிமாலைகள், சோப்பு, சீப்பு மற்றும் பலவிதமான பொருட்களையும் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்திலும் மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு சென்று திருவிழா நடைபெறும் இடங்களிலும் விற்பனை செய்து வந்தோம்.

எங்களுக்கு சொந்தமாக எங்கள் பொருட்களை விற்பனை செய்ய ஒரு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 20 நபர்கள் ஒன்று சேர்ந்து மகளிர் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி ஒருசுய உதவிக்குழுவை ஆரம்பித்தோம். அக்குழுவில் உள்ள எங்களுக்கு குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிய ரக ஆபரணங்கள் தயாரிக்க 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக மகளிர் திட்டம், நபார்டு வங்கி மற்றும் ரீட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கழிவு பட்டு நூலினால் ஆன வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியால் எங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மகளிர் திட்டத்தின் மூலம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாக கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள பட்டு சேலை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் நாங்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்களை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டுறவுத் துறையின் மூலமாகவும்,துணிநூல் (ம) கைத்தறி அலுவலகம் மூலமாகவும் கழிவு பட்டு நூல்களை எங்களுக்கு இலவசமாக வழங்கிட மகளிர் திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேற்று மாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் நடைபெறும் சாராஸ் கண்காட்சிகளிலும் எங்கள் நரிக்குறவர் இன மக்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்திலே உள்ள வணிக வளாகத்தில் ஒரு கடையினை திறந்து வைத்து எங்கள் உற்பத்தி பொருட்களை அந்த இடத்தில் விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளார். இதனால் எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், எங்களது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டிற்கும் எங்களின் நரிக்குறவர் மகளிர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.